search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பாதுகாப்பு ஆலோசகர்"

    • தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
    • அஜித் தோவல் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2019-ம் ஆண்டிலும் அவர் இப்பதவிக்கு நியனம் செய்யப்பட்டார். அவருக்கு மத்திய இணை மந்திரி அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவரது பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைந்தது.

    இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு 3-வது தடவையாக நியமிக்கப்பட்ட முதல் நபர் இவரே ஆவார்.

    அஜித் தோவல் 5 ஆண்டுகளுக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் நீடிப்பார். அவரது பதவிக்காலம் பிரதமரின் பதவிக் காலத்துடன் இணைந்ததாக இருக்கும்.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய காலத்தில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த துல்லிய தாக்குதல், 2017-ம் ஆண்டு சீனாவுக்கு எதிராக டோக்லாமில் நடந்த நேருக்குநேர் மோதல் சம்பவம், பாலகோட் பயங்கரவாத முகாம் தாக்குதல் சம்பவம் ஆகியவற்றில் அவரது பங்கு பெரும் பாராட்டை பெற்றது.

    1999-ம் ஆண்டு இந்திய விமானத்தை காந்தகாருக்கு கடத்திச்சென்ற பயங்கரவாதிகளுடன் இந்தியா சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய முக்கியமான அதிகாரியாக அஜித் தோவல் திகழ்ந்தார். இவர் கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார்.

    ரஷ்யாவுக்கான இந்திய தூதராக பணியாற்றி வரும் பங்கஜ் சரண் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    1982 பேட்ச் ஐ.எப்.எஸ் அதிகாரியான பங்கஜ் சரண் மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கெய்ரோ, அமெரிக்காவிலும் தூதரக அதிகாரியாக பணியாற்றிய இவர் தற்போது ரஷ்யாவுக்கான இந்திய தூதராக உள்ளார். இந்நிலையில், பங்கஜ் சரண் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே, இரண்டு முறை பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த பங்கஜ் சரண் இரண்டாண்டுகள் இந்த புதிய பொறுப்பில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ராஜிந்திர குமார் கடந்த ஜனவரி மாதம் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில், மற்றொரு துணை ஆலோசகராக பங்கஜ் சரண் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×